பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு 'சீல்'
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் அந்த அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை கடந்த 29-ந் தேதி வெளியிட்டது.இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பு பொது இடங்களில் இயங்குவது சட்டவிரோதம். எனவே இந்த அமைப்பிற்கு தடைவிதிப்பது, அலுவலகங்களுக்கு 'சீல்' வைப்பது போன்ற நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பி.எப்.ஐ. அமைப்பின் திருச்சி மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வன், தாசில்தார் கலைவாணி ஆகியோர் முன்னிலையில் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி 'சீல்' வைத்தார். இதைத்தொடர்ந்து அலுவலகம் முன் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த அந்த அமைப்பின் கொடியும் இறக்கப்பட்டது.