தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்


தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்
x

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.

காயம்

பவானியை அடுத்த சித்தோடு தாய் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கவுந்தப்பாடியில் இருந்து சித்தோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சித்தோடு அருகே வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ரோட்டில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் சிக்கியதில் வெங்கடேசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தடுப்புகள்

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அத்திக்கடவு- அவினாசி திட்ட அதிகாரிகள், சித்தோடு போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராட்சத பள்ளம் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த ராட்சத பள்ளம் 5 அடி விட்டம், 5 அடி ஆழம் கொண்டதாக இருந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வாகனங்கள் வராதவாறு தடுப்புகள் அமைத்தனர்.

குழாயில் உடைப்பு

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அத்திக்கடவு- அவினாசி திட்ட அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த அத்திக்கடவு- அவினாசி திட்ட இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதுடன், அதில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மின் மோட்டார் கொண்டு வரப்பட்டு பள்ளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பவானியை அடுத்த லட்சுமி நகரில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும், ஆவின், சித்தோடு, நசியனூர் வழியாக தேசிய நெடுஞ்சாைலக்கு திருப்பிவிடப்பட்டன.

பள்ளத்தை சீரமைக்க...

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் நடைபெற்றபோது அந்த பகுதியில் சாலையின் குறுக்கே குழாய் அமைக்கப்பட்டது. பின்னர் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களாக சித்தோடு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தனர்.


Related Tags :
Next Story