பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு
ஓசூர் அருகே பூனப்பள்ளி ஊராட்சியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை வட்டார அலுவலர் பூபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மத்திகிரி
ஓசூர் அருகே பூனப்பள்ளி ஊராட்சியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை வட்டார அலுவலர் பூபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆக்கிரமிப்பு
ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூனப்பள்ளி ஊராட்சியில் தளி சாலையில் தனியார் லேஅவுட் உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த லேஅவுட்டில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், நீர்வழிபாதை ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
அதன்பேரில் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் லேஅவுட் குடியிருப்பு சங்கத்தினர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து இருப்பது தெரியவந்தது. இதை உடனே அகற்றுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
தொடர்ந்து நீர்வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று குடியிருப்புவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அரசு அலுவலர்கள் வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதையடுத்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், ஊராட்சி மன்ற செயலர் சுபாஷினி ஆகியோர் உடனிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.