குமரி மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு;ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது
குமரி மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கல்லறை திருநாள்
இறந்து போன தங்களுடைய முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்யும் வகையில் கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் சகல ஆன்மாக்கள் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது
கல்லறை திருநாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கடைபிடிப்பது வழக்கம். அதன்படி நேற்று உலகமெங்கும் ஆன்மாக்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதேபோல் குமரி மாவட்டத்திலும் கிறிஸ்தவர்கள் சகல ஆன்மாக்கள் தினமான கல்லறை திருநானை அனுசரித்தனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் நேற்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று அவற்றை கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் கல்லறையில் மலர் தூவியும் மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
சி.எஸ்.ஐ. திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளை நேற்று காலையில் அனுசரித்தார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைக்கு மாலையில் சென்று பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு திருப்பலி
அதைத்தொடர்ந்து சவேரியார் பேராலயத்தில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அழகப்பபுரம், மார்த்தாண்டம், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.