கல்லறை திருநாள் கடைப்பிடிப்பு
கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரியலூர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டம் சுத்தம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, பாதிரியார்கள் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினர். அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், கன்னியாஸ்திரிகள் மனமுருகி ஜெப புத்தகத்தை படித்து, பாடல்களை பாடி, பின்னர் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து மறைந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டி கொண்டனர். இதற்கிடையே இறந்தவர்களின் கல்லறைகளில் பாதிரியார்கள் புனித நீரை தெளித்து தீர்த்த ஆசிர்வாதம் வழங்கினர். இந்த கல்லறை திருநாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.