தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு
தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு
தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தீத்தொண்டு நாள்
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் மும்மை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 வீரர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் இந்தியா முழுவதும் பலியான தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
மலர் வளையம் வைத்து மரியாதை
தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா பலியான தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைதொடர்ந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், வருகிற 20-ந்தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும், தஞ்சையில் உள்ள முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.