பன்னீர்செல்வமாக இருந்த ஒ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
பன்னீர்செல்வமாக இருந்த ஒ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். வரும் 11-ஆம் தேதி எடப்பாடி கே.பழனிச்சாமி பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஓ.பி.எஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார்.
திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்க கூடாது. ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. தனது சுயநலம் கருதி நேற்று ஒபிஎஸ் பயணத்தை மேற்கொண்டார்.
3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒ.பி.எஸ்-க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ் தவிர்த்து இருக்கலாம். அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்து விலகி செல்ல வேண்டும். பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார்.
அதிமுக சுதந்திரமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் பதவிகளை யாரும் அங்கரீக்க தேவையில்லை. பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஓ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
ஓபிஎஸ் தென் மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயதிற்கும் தலைவர் இல்லை, அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓபிஎஸ்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.