துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி
தேன்கனிக்கோட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிகோட்டையில் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஸ்ரீராமஜோதி ஊர்வலத்தின்போது வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்து அமைப்புகளை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இந்து அமைப்பினர் தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மோட்ச தீபத்தை எடுத்து ஊர்வலமாக கோட்டைவாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கு மோட்ச தீபம் வைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர்கள்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
இதற்கிடையே ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் இந்து அமைப்பினர் அதே பகுதியில் கூட்டத்தை நடத்தினர். அப்போது தமிழக அரசு, போலீசாரை கண்டித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.