இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது - வைகோ அறிக்கை


இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது - வைகோ அறிக்கை
x

கோப்புப்படம்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

ஓபிசி இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் 2001 இல் ஓ.பி.சி. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசின் சமூகநீதித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்டு 30, 2018 இல் நடந்தது. இதில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதியரசர்கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓ.பி.சி. பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு" என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மாண்பமை நீதிபதிகள், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓ.பி.சி. பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று எதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தெரிவிக்கிறது? 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்கள் நலனுக்காக மாற்ற பரிசீலிக்கலாமே" என்று அறிவுறுத்தி உள்ளனர். ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story