நீர்நிலைகளை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்


நீர்நிலைகளை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி முற்றிலுமாக வறண்ட பூமியாகும். மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மேலும் மழைக்காலத்தில் கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேமித்து வைக்கும் அணைக்கட்டுகளும் உள்ளன.

கருவேல மரங்கள்

பொதுவாக மழை அளவு மிக குறைவாக உள்ள பகுதி, கண்மாய், அணைக்கட்டு, ஊருணி, வரத்து கால்வாய் என அனைத்து இடங்களிலும் கருவேலமர ஆக்கிரமிப்பு பரவலாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள 90 சதவீத கண்மாய்களிலும் ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து அணைக்கட்டு பகுதிகளை வறட்சியின் பிடியில் தள்ளிவிட்டது.

இப்போது கண்மாய்களும் கருவேலமர ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டு பாசன வசதிக்கு உதவாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரத்து கால்வாய்களும் கருவேல மரங்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. விருதுநகர் கவுசிகமாநதி, அர்ஜுனா ஆற்று படுகை ஆகியவையும் கருவேலமர ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பாராமுகம்

கிராமப்பகுதி மக்கள் தங்கள் பகுதியிலுள்ள கண்மாய்களிலும், வரத்து கால்வாய்களிலும் உள்ள கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களின் போது விவசாயிகள் கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர். சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கடந்த காலங்களில் பலமுறை பல்வேறு பொதுநல வழக்குகளின் விசாரணையின் போது நீர் நிலைகளில் உள்ள கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளது.

ஐகோர்ட்டு அறிவுரை

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய பின்னரும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சிறப்பு அமர்வு நீதிபதிகள் வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகள் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றி அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கருவேல மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்கள் நட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதோடு மாவட்ட நிர்வாகம் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிதி ஆதாரம்

கிராம பஞ்சாயத்துக்கள் தங்கள் பகுதியில் நீர் நிலைகளில் உள்ள கருவேல மர ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் கருவேல மரங்களை ஆதாரமாக கொண்டுதான் கரிமூட்டம் போடும் தொழில் நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்தாய்வு செய்து கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடைமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2010-ல் மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சி போல் தற்போதும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் மூலம் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கும், நீர்நிலைப்பகுதிகளை மராமத்து செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

கலெக்டரின் கருத்து

நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஐகோர்ட்டு உத்தரவின் முழு விவரம் கிடைத்தவுடன் அரசின் வழிகாட்டல் படி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அத்துடன் நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அக்டோபர் 2-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களிலும் இது குறித்து கலந்தாய்வு செய்து கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


மரக்கன்றுகள் நடும் திட்டம்

கடந்த 2010-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிஜி தாமஸ் வைத்யள் கருவேல மரங்களை நீர்நிலை பகுதிகளில் அகற்றி அவற்றை ஏலம் விடுவதன் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு மாவட்ட முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதன் மூலம் மாவட்டத்தின் பரவலாக பல பகுதிகளில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இவை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பெரும்பாலான மரக்கன்றுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.


விவசாயம் பாதிப்பு

பாளையம்பட்டியை சேர்ந்த காமாட்சி கூறியதாவது:- கண்மாயில் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து இருப்பதால் போதிய அளவு மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. கருவேல மரங்கள் மழை நீரை உறிஞ்சி விடுகின்றன. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும்.


நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு வரவேற்பு

விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தர பாண்டியன் கூறுகையில், சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தது. இதனால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீரும் கிடைக்கும். .இதனால் விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தை மட்டும் நம்பி விவசாயம் செய்யாமல் நீர் நிலைகளின் பாசனத்தை நம்பி தைரியமாக விவசாய பணிகளை மேற்கொள்ளலாம். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி உடனடியாக கருவேல மரங்களை அகற்றி நாட்டு மரங்களை நட வேண்டும் என்றார்.


Next Story