சாலையை ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்கள்
சிங்கம்புணரி அருகே சாலையை ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே சாலையை ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கருவேல மரங்கள்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்களில் கருவேல மரங்கள் அதிகமாக சூழ்ந்துள்ளன. குறிப்பாக கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஆற்றுப்பகுதிகள் போன்றவற்றில் அதிகமாக சூழ்ந்துள்ளன. எஸ்.வி.மங்கலத்தில் இருந்து வையாபுட்டி வழியாக பிரான்மலை மற்றும் மதுரை மாவட்ட எல்லை பகுதியான மேலப்பட்டி வரை செல்லும் சாலையில் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது.
மேலும் இந்த சாலை குறுகிய சாலையாக இருப்பதால் எதிரே வாகனங்கள் வந்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கும்போது கருவேல முட்கள் குத்தும் அபாயம் உள்ளது.
கோரிக்கை
இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் முட் செடிகள் நீட்டி கொண்டு இருப்பதை கவனிக்காமல் செல்லும் போது முள் கிழித்து காயம் அடைகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.