ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டம்


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டம்
x

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

ஆர்ப்பாட்டம்

சென்னையில் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின்போது பாதியிலேயே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறினார். சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் நடப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவிட்டு அவர்களும் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியபோது அவரை நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இந்த சம்பவம் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி அவமதித்ததை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அவருடைய ஆதரவாளர்கள் சிலர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

உருவபொம்மை எரிப்பு

இதேபோல், கடமலைக்குண்டுவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர்.

பெரியகுளம்

பெரியகுளத்தில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீட்டெடுப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், மாவட்ட பிரதிநிதி அன்பு, தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சந்தோஷம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கிட்டு, சுதாகர், வார்டு செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம்

உத்தமபாளையத்தில் அ.தி.மு.க. மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் தினேஷ் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அங்குள்ள கிராம சாவடி பஸ் நிறுத்தத்தில் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story