ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும்-அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ பேட்டி


ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும்-அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ பேட்டி
x

அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும் என்று அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர வேண்டும் என்று அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ கூறினார்.

மாலை அணிவிப்பு

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கேட்காமலே எனக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறார். எனவே நான் என்றைக்கும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன். அதனை செயலிலும் காட்டுவேன். மீண்டும் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் ஆவார். அதற்காக நான் பாடுபடுவேன்.

காமராஜர் பிறந்த நாளன்று, அமைப்பு செயலாளராக பொறுப்பு ஏற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனுக்கும், புனித தலம் அ.தி.மு.க. தலைமை அலுவலகம்தான். எம்.ஜி.ஆர். வீடுதான் அவரது இறப்புக்கு பின் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டது. அந்த அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

4 பெரியதா?, 100 பெரியதா? என்றால், 100 தான் பெரியது. அது போல எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது. அவர் தான் கட்சியை வழிநடத்தக்கூடியவர். அவரது ஆட்சி காலம் தமிழகத்தில் பொற்காலமாக இருந்தது. பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்திய சாதனையாளர். அவரது ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

ஏட்டிக்குப்போட்டி

என்னை பொறுத்தவரை பிரிந்தவர்கள், பொதுச்செயலாளரிடம் பேசி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும். சகோதரர்கள் இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது சகஜம்தான். அ.தி.மு.க. கதவு அடைக்கப்படவில்லை. தலைவர்கள் மனம் திருந்த வேண்டும். மனம் மாற வேண்டும். அதிக உறுப்பினர்கள் ஆதரவு இருப்பவர்கள்தான் தலைமையேற்க வேண்டும். அவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த முடியும். இது தான் கட்சிக்கு நல்லது. கட்சி வளர்ச்சி பெறும்.

தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் விரும்பும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி, பொது செயலாளரிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசி கட்சியில் சேர முடியும். அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், எங்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்கிறார். அவர் ஏட்டிக்கு, போட்டியாக செய்வதால் எதையும் சாதிக்க முடியாது. தற்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக உள்ளது.

பொன்னையன் ஆடியோ

பொன்னையன் பேசிய ஆடியோவில் இருப்பது தவறான கருத்துக்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வில் சாதி, மதம், இனம், பணக்காரன், ஏழை, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்.

தி.மு.க.வின் வாரிசு அரசியல், ஊழல் ஆகியவற்றை ஒழிப்போம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம். அ.தி.மு.க.வில் முக்குலத்தோருக்கு பதவி தரவில்லை என்று சொல்வது தவறு. இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் நிரந்தர பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இந்த மீனாட்சி பட்டணத்தில் இருந்து கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story