சுவரொட்டியில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் கிழிப்பு
சுவரொட்டியில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் கிழிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொள்ள, அதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், இரட்டை இலையில் ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றொரு இலையில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படத்துடன் "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த சுவரொட்டிகள் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கண்டோன்மெண்ட் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த 2 சுவரொட்டிகளில் ஒன்றில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. மற்றொரு சுவரொட்டியில் படத்தை கிழிக்க முயற்சிக்கப்பட்டிருந்தது. சுவரொட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கிழித்தது மர்ம நபர்களா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சியில் அ.தி.மு.க.வினர் மத்தியில் மீண்டும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.