அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
நம்மை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும்போது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை பிறர் போற்றும் வண்ணம் நாகரிகமாக நாம் பயன்படுத்த வேண்டும். பேரறிஞர் அண்ணா நண்பர்களோடு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போகிற வழியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் பேசிய பேச்சாளர் பேரறிஞர் அண்ணாவை வாய்க்கு வந்தபடி வசைபாடிக் கொண்டிருந்தார்.
காரில் இருந்த நண்பர் அண்ணாவிடம், ஏன் அண்ணா உங்களை அவர்கள் வசைபாடுகிறார்கள் என்று கேட்டார். அண்ணா பதில் ஏதும் பேசாமல் மவுனம் காத்தார். கொஞ்ச தூரம் சென்றபின், ஒரு மாட்டு வண்டியை பேரறிஞர் அண்ணாவின் கார் முந்த வேண்டி இருந்தது. ஓரமாகச் செலுத்தி மாட்டு வண்டியை கடந்தார்கள். அப்போது மாட்டு வண்டியை ஓட்டியவர், கார் டிரைவரை நோக்கி வசைபாடினார்.
அப்போது காருக்குள் இருந்த நண்பர்களிடம் பேரறிஞர் அண்ணா, பார்த்தீர்களா? கார் வேகமாகக் போகிறது. மாட்டு வண்டியால் இதற்குச் சமமாக வர முடியவில்லை. அதுதான் கோபம். அதனால் நம்மை திட்டுகிறார். அவருக்குச் சமமாக நாம் வசைபாடாமல் நம் வேகத்தை அதிகரித்து, போக வேண்டிய இடத்தை அடைய வேண்டும் என்றார்.
நாகரிகமான வார்த்தைகள்
பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல, நம் வளர்ச்சி, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு நம்மை நாகரிகமற்ற முறையில் பேசுபவரை கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் மக்களுடைய வெறுப்பிற்கும், தொண்டர்களுடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இயலாமைதான் நம் மேல் கோபமாக மாறி இருக்கிறது. இந்த கோபம்தான் நாகரிகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது.
இவற்றையெல்லாம் மனதில் நிலைநிறுத்தி, அரசியல் ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அ.தி.மு.க. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.