ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி
புதிதாக வருபவர்கள் அ.தி.மு.க.வை வழிநடத்தட்டும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி கூறினார்.
கோவை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் வலுவடைந்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுக்குட்டி கோவை விளாங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சண்டையிட்டு கொள்வது சரியல்ல
உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடத்தி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. தற்போது அ.தி.மு.க. இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்ந்துள்ளனர்.
விலக வேண்டும்
தொண்டர்களின் ஆலோசனையை இருவரும் கேட்பதில்லை. நல்ல முறையில் கட்சியை வழி நடத்துவார்கள் என்று நினைத்து பலர் ஒதுங்கியுள்ளனர். ஆனால் இருவரும் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இருவரும் பதவி விலக வேண்டும். புதிதாக வருபவர்கள் அ.தி.மு.க.வை வழிநடத்தட்டும்.
மூத்த தலைவர் அன்வர் ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தவறு. முடிந்தால் இருவரும் இணைந்து என்னையும் நீக்குங்கள்.
போஸ்டர்
சசிகலா தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் பதவியை வழங்கினார். ஆனால் அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சேலம், பெரியகுளம் என இருவருக்கும் ஆதரவாக போஸ்டர் அடித்து ஓட்டி வருகின்றனர். ஆனால் இருவருக்கும் யாருமே ஆதரவு கிடையாது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பதே சொல்லி கொடுத்து பேசுவது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.