பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட நர்சுகள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தினர் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் துணை தலைவர் அஸ்வினி கிரேஸ் தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நர்சுகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் எம்.ஆர்.பி. நர்சுகள் சங்க துணைத் தலைவர் அஸ்வினி கிரேஸ் கூறியதாவது:-
கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு மருத்துவத்துறையும் அசாதாரண சூழலை சந்தித்தது. அப்போது தமிழக அரசு, மருத்துவ பணியாளர் வாரியம் (எம்.ஆர்.பி) நடத்திய தேர்வில் தேர்ச்சிப்பெற்று காத்திருப்பில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 500 நர்சுகளை, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக நியமித்தது. கொரோனா உச்சியில் இருந்த வேளையில் மாதம் ரூ.14 ஆயிரம் என்கிற குறைந்த சம்பளத்தில் தங்களின் உயிரை பணையம் வைத்து நர்சுகள் சேவையாற்றினர்.
ஆனால் தற்போது நர்சுகளை பணி நீக்கம் செய்வது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகளை மாவட்ட சுகாதார மையத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் 2½ ஆண்டுகள் நர்சுகளின் உழைப்பை பெற்றுகொண்டு தற்போது நிரந்தரமற்ற பணி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே காலியாக உள்ள சுமார் 2 ஆயிரத்து 500 இடங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.