நுங்கு விற்பனை மும்முரம்
சங்கராபுரம் அருகே நுங்கு விற்பனை மும்முரம்
சங்கராபுரம்
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் கொடுமைக்கு அஞ்சி பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பாதசாரிகள் குடை பிடித்துக்கொண்டும், தலையில் தொப்பி அணிந்தும், ஈரமான துணியை தலையில் போர்த்திக்கொண்டும் செல்வதை காண முடிகிறது. அதிக வெப்பத்தினால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து உடுத்தி இருந்த ஆடைகளை நனைய செய்து விடுவதோடு தாகத்தையும் வருத்துகிறது. இதனால் இளநீர், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை சாப்பிட்டும், பதநீர், மோர், கரும்பு சாறு, பழச்சாறுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகி பொதுமக்கள் தாகத்தை தணித்து வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் சிலர் கடை அமைத்து பழச்சாறு, குளிர்பானங்கள், இளநீர், நுங்கு வியாபாரம் செய்வதை காண முடிகிறது.
சங்கராபுரம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழை பெய்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை இருப்பதால் பொதுமக்கள் குளிர்சாதன எந்திரம், மின்விசிறிகள் ஆகியவற்றை இயக்கி சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் தாகத்தை தணிக்க குளிர்பானங்கள், இளநீர், தர்ப்பூசணி, நுங்கு, கூழ், மோர் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம்- குளத்தூர் செல்லும் சாலையில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நுங்கை வாங்கி செல்வதை காண முடிந்தது.