எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு


எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு
x

நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

அதிகாரி ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக அவர் நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவ, மாணவிகளை தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாட செய்து, இத்திட்டத்தின் மூலம் எவ்வாறு மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றும், தங்களது பாடங்களின் பொருள் புரிந்து எவ்வாறு பயில்கின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினர்.

தார்சாலை பணிகள்

இதனைத் தொடர்ந்து, நாமக்கல் அழகுநகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அவர் எண்ணும் எழுத்தும் திட்டம், சத்துணவுத்திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாமக்கல் நகராட்சி, காவேட்டிப்பட்டி மகரிஷி நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2 தார் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சி, சாமி நகரில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பினையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெளிப்பான், பண்ணை கருவிகள், தென்னை நாற்றுகள், தார்பாய் உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற்று பயனடைந்த விவசாயிகளிடம் விளை நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயம் குறித்தும் கேட்டறிந்தார்.

இறுதியாக பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குன்னமலை சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story