சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள மோக்கா புயல், 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

குறிப்பாக, புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். அந்தவகையில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

பலமான காற்று வீசுகிறது

தற்போது, மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதோடு, கடற்கரை பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுவதை அறிவிக்கவே இந்த 1-ம் எண் கொண்ட எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது என்று சென்னை துறைமுக அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story