சாயக்கழிவு நீரால் பாழாகும் நொய்யல் ஆறு


சாயக்கழிவு நீரால் பாழாகும் நொய்யல் ஆறு
x
தினத்தந்தி 30 Jun 2023 12:25 AM IST (Updated: 2 July 2023 3:40 PM IST)
t-max-icont-min-icon

சாயக்கழிவு நீரால் பாழாகும் நொய்யல் ஆறு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவார்களா? என்ற கேள்வி எழும்பி உள்ளது.

திருப்பூர்

மானுட வாழ்வின் ஜீவாதாரம் ஆறுகள். அதனால் மனித நாகரிகம் ஆற்றங்கரையோரம் தொடங்கியது. ஊரின் அழகே ஆறுதான். அதுவும் நொய்யல் தொடக்கம் கயிலாயம் என போற்றப்படும் வெள்ளிங்கிரி மலையாகும். இங்கிருந்து பயணத்தை தொடங்கி இருபுறமும் வளத்தை தரும் வான்புகழ் கொண்ட ஆறு இது. கடந்த 60 ஆண்டுகள் முன்பு வரை இந்த ஆற்றில் இறங்கி தாகம் தீர்க்க தண்ணீர் குடித்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதே நொய்யல் ஆற்றில் பிடிக்கப்படும் மீனுக்கு தனி ருசி உண்டு. அத்தனை வளங்களையும் அள்ளித்தந்த நொய்யல் ஆற்றின் அருகே இன்று செல்ல அனைவரும் அச்சப்படுகிறார்கள். நொய்யல் ஆற்றின் தண்ணீர் காலில் பட்டால் நோய் தொற்றும் அளவுக்கு அது அத்தனை அசுத்தங்களை சுமக்கிறது. தனி மனித பேராசையின் விளைவால் இன்று நொய்யல் ஆறு சேறாகி போனது.

பின்னலாடை தொழில் மூலமாக உலக அளவில் பெயர் பெற்ற ஊர் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தாரை வாழ வைக்கும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களுக்கும் வாழ்வளிக்கும் ஊராக விளங்கி வருகிறது. பின்னலாடை தொழில் மூலமாக உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த திருப்பூர் மாநகரை சுற்றியும் நொய்யல் ஆற்றின் கிளைகள் பறந்து விரிந்து செல்லுகின்றன.

கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் , ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு தற்போது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீைர சுத்திகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாயப்பட்டறை நிறுவனம் நொய்யல் ஆற்றின் கரையோரம் இயங்கி வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் அதில் சில நிறுவனங்கள் மட்டுமே சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் மூலமாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். சாயப்பட்டறைகள், பிரிண்டிங் பட்டறைகள் என சில நிறுவனங்கள் நொய்யல் ஆற்றின் வழியாக கழிவு நீரை திறந்து விடுகின்றன. இதனால் தண்ணீர் மாசு அடைவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வசந்தாமணி (ஆண்டிபாளையம்):-

திருப்பூர் ஆண்டிபாளையம் சுண்டமேடு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. பனியன் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் நொய்யல் கரையோரம் இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் முருகம்பாளையம், அய்யம்பாளையம், சுண்டமேடு ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள கரையோரங்களில் சாயக்கழிவுகள், பனியன் கழிவுகளும் கெமிக்கல் கலந்து கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

சபரி நடராஜன் (பி.கே.ஆர். காலனி) :-

திருப்பூர் பகுதிகளில் தொடர்ந்து சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுவதால் நீர் மாசு அடைவதோடு, நிலத்தடி நீரை எடுத்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், சாயக்கழிவு தினமும் ஆற்றில் விடப்படும் செய்திகள் வெளிவருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே இது சுட்டி காட்டுகிறது. நடவடிக்கைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே சாயக்கழிவு நீரை வெளியேற்றுவதை முழுமையாக தடுக்க முடியும் நிலத்தடி நீரும், மண் வளமும் பெருகும்.

கவுன்சிலர் அருணாச்சலம் (வீரபாண்டி):-

வீரபாண்டி பகுதியில் செல்லக்கூடிய நொய்யல் ஆற்றின் கரையோரம் தொடர்ந்து இரவு நேரங்களில் சாயக்கழிவு குப்பைகளும், கட்டிட கழிவுகள், கோழி கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கும் மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் சாயக்கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நொய்யல் ஆற்றின் வளமும் பாதிக்கப்படுகிறது.

கோவிந்தராஜ் (அரண்மனைபுதூர்):-

திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள பிரிண்டிங் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் மூலமாக ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து வெளியிட அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சிலர் செய்யும் தவறினால் சுற்றுச்சூழல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாக சாயக்கழிவு நீரை நிலத்தடியில் விட்டதால் சாயக்கழிவு நீரானது பல அடி ஆழத்திற்கு தேங்கியுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, இனி வரும் எதிர்கால சந்ததியின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. ரசாயனம் கலந்து பயன்படுத்தும் துணிகளை மக்கள் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும். அதற்கு பதிலாக கதர் ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் வளமும் பெருகும்.

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விடும் நபர்களை கண்டறிந்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கலப்பு தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

அதிகாரிகள் உடந்தை?

திருப்பூர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாகிறது. கடந்த காலங்களில் நொய்யல் ஆற்றில் அடிக்கடி சாயக்கழிவு நீர் கலக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வந்த பின்பு இது ஓரளவு குறைந்துள்ளது. பல சாய ஆலையினர் நியாயமான முறையில் நடந்து கொள்கின்றனர். ஒரு சிலர் தான் மழை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். காசிபாளையம் தடுப்பணை அருகே மதகு இருக்கும் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் அதிக அளவில் நுரை பொங்கி வருகிறது.

எங்கள் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை நாங்கள் வீட்டில் கருவி மூலம் சோதித்ததில் 300 டி.டி.எஸ்(உப்புத்தன்மையை குறிப்பது) இருந்தது. அதுவே வீட்டு கிணறு, ஆழ்குழாய் நீரை சோதித்த போது 2500 டி.டி.எஸ் இருந்தது. இவ்வாறு தண்ணீர் மிகவும் மோசமாக இருப்பதால் இதை வீட்டிற்கு பயன்படுத்த முடிவதில்லை. விவசாயத்திற்கு பயன்படுத்தினாலும் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. இதேபோல் கால்நடைகளும் அந்த தண்ணீரை அருந்துவதில்லை. இனியும் நீரின் தன்மை மாறாமல் இருப்பதற்கு சாயக்கழிவு நீர் விசயத்தில் அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் தீவிரமாகவும், நேர்மையாகவும் கண்காணித்தால் இதை நிச்சயம் தடுக்க முடியும். ஆனால் திருப்பூரின் நிலையை பார்த்தால் இந்த தவறுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றார்களோ என்ற சந்தேகம் தான் அனைவருக்கும் வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story