அடிக்கடி பழுதடையும் நொய்யல் ரெயில்வே கேட்
அடிக்கடி பழுதடையும் நொய்யல் ரெயில்வே கேட்டால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் ரெயில்வே கேட்
கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக ரெயில்வே இரும்பு பாதை செல்கிறது. இந்த வழியாக சென்னை, திருச்சி, கரூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ஈரோடு, கோவை, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிவிரைவு பயணிகள் ரெயில்களும், சாதாரண பயணிகள் ரெயில்களும், சரக்கு ரெயில்களும் சென்று வருகின்றன. ரெயில்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பு வரும்போது சம்பந்தப்பட்ட கேட் கீப்பருக்கு அருகே உள்ள ரெயில்வே நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிப்பார்கள்.
இதையடுத்து, கேட் கீப்பர் மூலம் நொய்யலில் சாலையின் குறுக்கே உள்ள 2 ரெயில்வே கேட்களும் மூடப்படும். ரெயில்கள் சென்ற பிறகு மீண்டும் ரெயில்வே கேட் திறக்கப்பட்டு அந்த சாலை வழியாக அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் ரெயில்வே கேட் பழுதடைந்ததால் ரெயில்கள் சென்ற பிறகு அந்த கேட்டை திறக்க முடியாமல் கேட் கீப்பர் அவதியடைந்து வருகிறார். இதன்காரணமாக கோவை, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு, கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை வழியாக சென்று வரவேண்டிய நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ரெயில்வே ஊழியர்கள் அவ்வபோது வந்து ரெயில்வே கேட்டை சீரமைப்பதும், மீண்டும் சில வாரங்களில் ரெயில்வே கேட் பழுதாவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் புதிய ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
அடிக்கடி பழுது
லாரி டிரைவர் பழனிசாமி:- நான் லாரியில் செங்கலை ஏற்றிக்கொண்டு அடிக்கடி இந்த வழியாக கொண்டு சென்று இறக்கி வருவது வழக்கம். செங்கல்லை அவசரமாக இறக்கி விட்டு வருவதற்காக சில நேரங்களில் வரும் போது ரெயில்வே கேட் திறக்காமல் மூடியபடியே இருக்கும். ஏனென்றால் அடிக்கடி ரெயில்வே கேட் பழுதாகி திறக்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக புன்னம் சத்திரம் வழியாக நீண்ட தூரம் சென்று செங்கல் இறக்கும் பகுதிக்கு செங்கலை கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே ரெயில்வே கேட்டுகளை இனிவரும் காலங்களில் பழுது ஏற்படாமல் நல்ல முறையில் சீரமைக்க வேண்டும்.
கால விரயம்
நொய்யல் பகுதியை சேர்ந்த பசுபதி:-நொய்யல் ரெயில்வே கேட் வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்களும், லாரிகள், வேன்கள், கார்கள், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி பழுதடைந்து மூடிய கேட்டை திறக்க முடியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். இந்த ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. அதன் காரணமாக இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் கால விரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிய ரெயில்வே கேட் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிபொருள் செலவு கூடுகிறது
டிராவல்ஸ் டிரைவர் மோகன் குமார்:- நான் எனது வாகனத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு அவர்கள் குறிப்பிடும் இடத்திற்கு கூட்டிச்செல்ேவன். அப்போது நொய்யல் ரெயில்வே கேட் வழியாக அடிக்கடி சென்று வருவது வழக்கம். ஆனால் பயணிகளை ஏற்றிக்கொண்டு முக்கியமான இடத்திற்கு செல்வதற்காக வரும்போது ரெயில்வே கேட் பழுதடைந்த நிலையில் மூடப்பட்டு இருக்கும். இது போன்று ரெயில்வே கேட் மூடப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதால் எரிபொருள் செலவு கூடுகிறது. மேலும் டிரைவர்களுக்கு அலைச்சலுடன், காலவிரயமும் ஏற்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் பழுதடைந்த ரெயில்வே கேட்டை மாற்றுவதுடன், இதனை அடிக்கடி பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்.
நோயாளிகள் அவதி
ஆம்புலன்ஸ் டிரைவர் மதன்:- நான் ஆம்புலன்சில் பலதரப்பட்ட நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம். நோயாளிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு கோவை செல்லும்போது நொய்யல் ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசரமாக இந்த வழியாக செல்லும் போது ரெயில்வே கேட் திறக்க முடியாமல் 2 நாட்கள் கூட ஆகி விடுகிறது. அதன் காரணமாக நொய்யல் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் வேலாயுதம்பாளையம் சென்று அங்கிருந்து புன்னம் சத்திரம் வழியாக கோவை செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் உரிய நேரத்தில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் பழைய ரெயில்வே கேட்டை மாற்றி புதிய ரெயில்வே கேட் அமைத்து இனிவரும் காலங்களில் ரெயில்வே கேட் பழுதடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.