குன்னூரில் விதிமீறல் கட்டிடத்துக்கு நோட்டீஸ்


குன்னூரில் விதிமீறல் கட்டிடத்துக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 July 2023 12:45 AM IST (Updated: 6 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் விதிகளை மீறி கட்டிய கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.

நீலகிரி


குன்னூர்


குன்னூரில் விதிகளை மீறி கட்டிய கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.


விதிமீறி கட்டப்பட்ட கட்டிடம்


நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கும் தென் மேற்கு பருவமழை மற்றும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றால் மண்சரிவு, வீடுகள் இடிதல், சாலையில் மரம் விழுதல் போன்ற பேரிடர் நடைபெறுகின்றன. குறிப்பாக 1,500 சதுர அடி அளவிற்குள்ளும், 7 மீட்டர் உயரத்திற்குள்ளும் மட்டுமே கட்டிடங்களை கட்ட வேண்டும். மேலும் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் எந்த ஒரு கட்டிடங்களும் கட்ட தடை உள்ளது. இருப்பினும் ஒருசிலர் இந்த விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.


இந்த நிலையில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு இன்ட்கோ குடோன் அருகே அனுமதி இல்லாமல் விதியைமீறி கட்டிடங்கள் கட்டுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கட்டிடத்தின் முதல் தளம் விதி மீறி கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.


நோட்டீஸ்


இதன் அடிப்படையில் விதிமீறிய கட்டிடத்தை 3 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று கூறி நகராட்சி நிர்வாகம் மூலம் கட்டிட கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று நகராட்சியில் முக்கிய அதிகாரிகள் இல்லாததால் 30 வார்டுகளிலும் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.


எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.



Next Story