பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.

நெல்லை மாவட்டம் சத்திர புதுக்குளத்தை சேர்ந்த சுப்பு ஆறுமுகம், சுதந்திர போராட்ட காலத்தில் தனது வில்லுப்பாட்டின் மூலமாக மக்களிடையே தேச ஒற்றுமையை வளர்த்து வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிசை கச்சேரிகளை நடத்தி வந்தார். பள்ளி-கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வழியாக மக்களுக்கு எடுத்து கூறியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்துக்கு பிறகு சுப்பு ஆறுமுகத்தால் வில்லுப்பாட்டு கலை உலகளவில் பரவியது. இதுவரை சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

'பத்மஸ்ரீ' விருது

கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். 2021-ம் ஆண்டு மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.

திரைப்படங்களிலும் சில நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார். மேலும் சினிமா காட்சிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகர் இல்லத்திலேயே ஓய்வில் இருந்து வந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற வில்லிசை பாட்டுக்கலைஞர் 'பத்மஸ்ரீ' சுப்பு ஆறுமுகம் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்று அறிந்து வேதனையடைகிறேன். இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று 'வில்லிசை வேந்தர்' என போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார். மூத்த கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னர் இரங்கல்

கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பத்மஸ்ரீ விருது பெற்ற சுப்பு ஆறுமுகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த இசை கலைஞர், எழுத்தாளர் மற்றும் மேன்மைமிகு வில்லுப்பாட்டு கலைஞரை நமது தேசம் இழந்துவிட்டது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story