கிண்டியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை


கிண்டியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை
x

கிண்டியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜிதேந்திரன். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரிடம், அதே மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (30) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் ஜிதேந்திரனிடம் சமையல் வேலை செய்ய பீகார் மாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் வந்தார். இவர்கள், ஒரு அறையில் ஒன்றாக தங்கி இருந்தனர். அப்போது புதிதாக வந்த பீகார் வாலிபருக்கும், ராகேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில் தன்னுடைய செல்போன் காணவில்லை என கூறி ராகேஷ் மீண்டும் பீகார் வாலிபருடன் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார். இதில் பீகார் வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் வேலைக்கு வந்த பீகார் வாலிபரை பார்க்க அவர்களது அறைக்கு ஜிதேந்திரன் சென்றபோது, அவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த ராகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் மாயமாகி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார், பீகார் வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பீகார் வாலிபர் வேலைக்கு வந்த முதல் நாள் என்பதால் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய ராகேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story