வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
சென்னை,
குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (9.11.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருப்பூர், திண்டுக்கல், தேனி , மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை வடகிழக்கு பருவமழை மூலம் 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால் அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 243.6 மி.மீ மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 37.2 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.