வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பா.ஜ.க.,சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி


வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்:  பா.ஜ.க.,சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி
x

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் சீமான் மீது முதல்-அமைச்சர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ஈ.வி.கே.சம்பத்தின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைதொடர்ந்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளிகள் குறித்து ஒருசிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் வேறு யாரும் அல்ல, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மறைமுகமாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாகவும் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் நேரடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமான் தன்னுடைய விளம்பரத்துக்காக தமிழர்களுக்கும், வடமாநில தொழிலாளிகளுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பல்வேறு உரைகளில் அவருக்கு தண்டனை கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். தொழிலாளர்களுக்கு, மாநிலம் கிடையாது, சாதி கிடையாது, மொழி கிடையாது. கைகள் உண்டு, வாய் உண்டு, வயிறு உண்டு. ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தான் தமிழ் மரபு. தமிழின் பெயரால், தமிழன் முப்பாட்டன், நாப்பாட்டன் என்று சொல்லிக் கொண்டு இதைப்போன்ற விஷங்களை விதைப்பது தவறு. தமிழக அரசு அம்பு ஏய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது. அம்பு ஏய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story