ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்


ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

ஆட்கள் பற்றாக்குறை

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வந்து, பின்னர் ஈரோடு, திருச்சி, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரை கடந்து பூம்புகாரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இப்படி காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் காவிரி நீரை கொண்டு மட்டுமே விவசாயம் நடந்து வந்த மயிலாடுதுறை பகுதியில், தற்போது பம்புசெட் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் எந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். அறுவடை பணி முழுவதும் எந்திரம் மூலம் நடந்து வந்தாலும் நடவுப்பணிகளில் இன்னமும் நாற்றுவிட்டு பெண் கூலிதொழிலாளர்களை கொண்டுதான் நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் செய்து வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள்

சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும் எந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்காக பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்து நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்களை கொண்டு நடவு செய்து வருகின்றனர். 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளின் பொது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் பயனில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே கோடங்குடி பகுதியில் வடமாநில ஆண் தொழிலாளர்கள் விவசாய வேலைகள் செய்து நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 500 சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் நாற்று பறித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வருகின்றனர். களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றை பறித்து கைநடவு செய்து வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரபிரசாதமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story