வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை
கோவை சரவணம்பட்டியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த நபர், வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்தார்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த நபர், வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணம் பறிக்க முயற்சி
பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுராம் என்பவரது மகன் பில்ட்ராம் (வயது 35). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து, அங்கு கட்டிட வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பில்ட்ராம் சரவணம்பட்டி-விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வரும் நபர் ஒருவர், அங்கு வருபவர்களிடம் பணத்தை பறித்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் அந்த நபர் நேற்று மது அருந்த வந்த பில்ட்ராமிடம் பணம் தருமாறு கேட்டதோடு, அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றார். அப்போது பில்ட்ராம் தடுத்து உள்ளார். பின்னர் டாஸ்மாக் கடை முன்பு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், பில்ட்ராமை அடித்து கீழே தள்ளி விட்டார்.
அடித்துக்கொலை
இதில் பில்ட்ராம் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் விக்னேஷ் (28) சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பில்ட்ராமின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விசாரணையில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த நபர் பில்ட்ராமை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடை முன்பு நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.