சிமெண்டு ஆலையில் மயங்கி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
சிமெண்டு ஆலையில் மயங்கி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
விக்கிரமங்கலம்:
தொழிலாளி சாவு
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இர்சாத்(வயது 30) என்பவர், ஒப்பந்த கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த ஆலையின் உள்ளே நிலக்கரி செல்லும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆலையின் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இர்சாத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ஆலையின் மேலாளர் கமலக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் இர்சாத்தின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் பீகார் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.