வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன் (கும்பகோணம்), சுசிலா (திருவிடைமருதூர்), பூங்கொடி (பாபநாசம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்புத் துறை, அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா, பேசுகையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை தீவிரமாக பெய்யும். இதனால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.வெள்ளம் பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார்படுத்தி இருக்க வேண்டும். ரேஷன் கடைகளில் ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.