வேலூர் மீன்மார்க்கெட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
புரட்டாசி மாதம் முடிந்தததால் வேலூர் மீன்மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் மீன் வாங்குவதற்கு குவிந்தனர்.
மீன்மார்க்கெட்
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதிகாலையில் மொத்த மீன்கள் விற்பனையும், காலை 7 மணிக்கு மேல் சில்லறை மீன்கள் விற்பனை நடைபெறும். பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனால் மீன்மார்க்கெட்டில் சிறிதளவே கூட்டம் காணப்பட்டது. மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.
அசைவ பிரியர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி மீன்மார்க்கெட்டில் ஏராளமான அசைவ பிரியர்கள் குவிந்தனர். அதனால் மார்க்கெட் வளாகம் நிரம்பியது. இதனால் கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் பெரியமீன் ரூ.1,000-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.600-க்கும் இறால் ரூ.300 முதல் ரூ.350-க்கும், அயிலை, கட்லா மீன்கள் ரூ.140-க்கும் விற்பனையானது.
சங்கரா மீன் ரூ.180 முதல் ரூ.220-க்கும், சுறா ரூ.400 முதல் ரூ.600-க்கும், விறால் ரூ.350-க்கும், நெத்திலி ரூ.180-க்கும், நண்டு ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெய்மீன் ரூ.120-க்கும், மத்திமீன் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.