மக்களுக்கு பயன்படாத கழிவறைகள்
மக்களுக்கு பயன்படாத கழிவறைகள்
தஞ்சை மாநகரில் மக்களுக்கு பயன்படாத நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நம்ம டாய்லெட் திட்டம்
மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்பதை தடுக்கவும், கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஈர்க்கும் திட்டமாக நவீன வசதிகளுடன் கூடிய நம்ம டாய்லெட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நம்ம டாய்லெட் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளத்துடன் கூடிய கழிப்பறை, ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பமுள்ள பைபர் பிளாஸ்டிக்கினால் இந்த டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
எடுத்து செல்லக்கூடிய வகையில் வடிவமைப்பு
இது தற்காலிக கழிவறையை போன்றது. எங்கே வேண்டுமானாலும் எடுத்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தஞ்சை மாநகராட்சி பகுதியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது மக்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத நிலையில் தான் உள்ளது. தஞ்சை மானம்புச்சாவடி வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் இருந்த கழிப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அவைகள் இடிக்கப்பட்டன.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டதால் நம்ம டாய்லெட் திட்டத்தின் கீழ் தற்காலிக கழிவறைகள் வைக்கப்பட்டன. ஆனால் போதிய தண்ணீர் வசதி இல்லாமலும், பராமரப்பு இல்லாமலும் பயன்பாடு இல்லாமல் போனது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது இந்த தற்காலிக கழிவறைகளும் அகற்றப்பட்டன.
தற்காலிக பஸ் நிலையம்
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்ட நேரத்தில் தஞ்சை வடக்குவாசல் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டது. இதனால் அந்த பஸ் நிலையத்தில் மக்களின் வசதிக்காக நம்ம டாய்லெட் திட்ட தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. தற்போது பழைய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு கூட யாருக்கும் பயன்படாத நிலையில் தற்காலிக கழிப்பறைகள் தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ளது.
இவைகள் வீணாகி கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பயன்படுத்துவதற்காக தான் நம்ம டாய்லெட் திட்ட கழிவறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாநகரை பொறுத்தவரை ரெயிலடி, திலகர்திடல், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மக்கள் அதிகஅளவில் வந்து செல்கின்றனர்.
ரெயிலடியில் வைக்க வேண்டும்
தஞ்சை ரெயிலடி பகுதியில் கழிவறை வசதி என்பது இல்லை. இதனால் ரெயில்கள் மூலம் தஞ்சைக்கு வரக்கூடிய பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முன்பு தலைமை தபால் நிலையம் அருகே கழிவறை வசதி இருந்தது. அவைகள் இடிக்கப்பட்ட பிறகு மீண்டும் கழிவறை கட்டப்படவில்லை. இதனால் நம்ம டாய்லெட் கழிவறைகளை ரெயிலடி பகுதியில் வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் திலகர் திடல் பகுதியில் உள்ள மாலைநேர மார்க்கெட்டிற்கும் மக்கள் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். கொண்டிராஜபாளையம் பகுதியில் செயல்படும் தற்காலிக மீன்மார்க்கெட்டிற்கும் மக்கள் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற இடங்களில் நம்ம டாய்லெட் கழிவறைகளை வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கம். மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நம்ம டாய்லெட் கழிவறைகள் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.