வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு 26-ந்தேதி தேர்தல்


வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு 26-ந்தேதி தேர்தல்
x

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அ.தி.மு.க. தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேட்புமனு பரிசீலனை

அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 (இன்று), 19-ந்தேதிகளில் (நாளை) மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்கு எண்ணிக்கை 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

ரூ.25 ஆயிரம் கட்டணம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், தலைமைக்கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்கு எண்ணப்படும் இடங்கள் எவை? என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு

இந்த தேர்தலில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே எடப்பாடி பழனிசாமி, போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும்.


Next Story