அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை - சென்னை ஐகோர்ட்டு


அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை - சென்னை ஐகோர்ட்டு
x

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த கமலநாதன், மோகனா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன்னர் தங்கள் தரப்புக்கு விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீர்நிலையை ஆக்கிரமித்து பொதுப்பணித்துறை சாலை அமைத்திருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இதனை அரசு தரப்பு மறுத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலம் தங்களுக்கு சொந்தம் என்பதை மனுதாரரால் நிருபிக்க முடியவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை. அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Next Story