குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு


குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
x

கோப்புப்படம் 

கடந்த 2013-ம் ஆண்டு மணல் குவாரிகளை தனியார் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு அரசு மட்டுமே நடத்தி வருகிறது.

மதுரை,

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சமாதானம் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பாம்பாறு ஓடுகிறது. அந்த பாம்பாறு ஆற்றில் 2.108 ஹெக்டேர் பரப்பளவில் 31,322 கன மீட்டருக்கு ஆற்று மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பாம்பாறு ஆற்றில் வணிக நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் எடுக்கப்படுகிறது.

ஏற்கனவே இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்றங்களும் அவ்வப்போது, பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. ஆனால் அதிகாரிகள் அதை முறையாக பின்பற்றாமல் மணல் கடத்தலுக்கு துணை போகின்றனர். ஆகவே அதிகமாக மணல் அள்ளுவதை தடைசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவானது ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆஜரான வக்கீல், மனுதாரர் குறிப்பிடும் குவாரி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மூடப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 2013-ம் ஆண்டு மணல் குவாரிகளை தனியார் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு அரசு மட்டுமே நடத்தி வருகிறது. மணல் குவாரிகள் துவங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணலை எடுக்க ஒப்பந்த பணி என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குகின்றனர்.

இது அரசின் கனிமவள சட்டத்திற்கு எதிரானது. எனவே குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story