'அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி களங்கம் கற்பிக்க முடியாது என்றும், அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, ஜெயக்குமார், அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் வந்து ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அ.தி. மு.க. பொதுக்குழு நடைபெற உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மகனுக்கு பட்டாபிஷேகம்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்று வருகிறது. அதுபோல தனி மனிதனுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இவற்றில் கவனம் செலுத்தாமல் தன்னை விளம்பரப்படுத்தல், தனது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டருக்கு மானியம் எதுவும் தரவில்லை. நீட் தேர்வு வரவே வராது. ஒரு கையெழுத்தில் முடித்துவிடுவோம் என்று சொன்னார்கள். அதையும் முடிக்கவில்லை. 500 வாக்குறுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல். மக்கள் எதிர்பார்க்காத வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றி விட்டு, நாங்கள் நிறைவேற்றிவிட்டோம், நிறைவேற்றிவிட்டோம் என்று மார்தட்டி விளம்பரப்படுத்தி அதன்மூலம் கோயபல்ஸ் பிரசாரத்தை செய்து வருகிறது இந்த விடியா தி.மு.க. அரசு.

அ.தி.மு.க.வினர் மீது வழக்கு

அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடவேண்டும் என்று கடந்த ஒரு வருடமாகச் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. 49 இடங்களில் ரெய்டு நடக்கிறது. அவரை, கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவருடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு ரெய்டு நடத்தி களங்கம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.

பெரிய பந்து

அ.தி.மு.க. என்பது யாராலும் அமுக்க முடியாத ஒரு பெரிய பந்து. தண்ணீரில் பந்தை அமுக்க முடியாது. அது மேலேதான் வரும். எனவே எத்தனை அடக்குமுறை வந்தாலும் சரி நீதிமன்றத்தில் சந்திப்போம். லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கிவிட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களைத் திசை திருப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். தி.மு.க.வின் மக்கள் விரோத போக்கை யாரும் பேசக்கூடாது என்பதற்காக ரெய்டு ஆயுதத்தை எடுப்பது தான் இவர்கள் வேலை.

என் மீது 4 வழக்குகளைப் போட்டார்கள். ஒரு வழக்கு முடிந்துவிட்டது. இன்னும் 3 வழக்குகள் உள்ளது. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கி விடுவோமா? இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம். உலகத்திற்கே எங்கள் குரல் கேட்பதுபோல பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story