அ.தி.மு.க.- தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைக்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை - எல்.முருகன்


அ.தி.மு.க.- தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி வைக்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை -  எல்.முருகன்
x

பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் சமூக நீதி வளர்கிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

மேட்டுப்பாளையம்,

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு தெலுங்கில் பேசியும் அசத்தினார். பின்னர் பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழையும், தமிழர்களையும் 70 ஆண்டுகளாக தி.மு.க. வஞ்சித்து வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை ஐ.நா. சபை வரை எடுத்து சென்றவர், பிரதமர் மோடி. இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை காப்பாற்றினார். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர், தமிழரின் நலன் குறித்து பேச தகுதியற்றவர்கள்.

அ.தி.மு.க.வுடனோ, தி.மு.க.வுடனோ ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை. மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்து உள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற பா.ஜனதா ஓட்டுகளே உதவியது. பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் சமூக நீதி வளர்கிறது. அது பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story