''எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் தி.மு.க. சந்திக்க தயார்''


எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் தி.மு.க. சந்திக்க தயார்
x

‘‘எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் தி.மு.க. சந்திக்க தயார்’’ என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் நேற்று நடந்த தி.மு.க. உண்ணாவிரதத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முடித்து வைத்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வு விலக்கு தமிழ்நாடு மக்களுடைய ஒட்டு மொத்த உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பிரச்சினை என்பதால் தான் தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் அதை சந்திப்பதற்கு தி.மு.க. தயாராக இருக்கிறது. கவர்னர் தமிழிசை கூறியுள்ளது தமிழ்நாடு மாணவர்களை திசை திருப்பி அவர்களது நம்பிக்கையை சீர்குலைக்கின்ற செயலாக நாங்கள் கருதுகின்றோம். இந்தி எதிர்ப்பு என்பது இன்றும் எங்களின் உடம்பில் ரத்தத்தில் ஊறி உள்ளது. இந்திக்கு ஆதரவாக எந்த இடத்திலும் இருந்தது கிடையாது. மாணவர்கள் தற்கொலை வழக்கமான ஒன்றுதான் அரசியல் ஆக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றா?. நீட் தேர்வை நீக்கி பாருங்கள் வழக்கமான ஒன்று நடக்கிறதா? என்று தெரியும். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா ஜனாதிபதிக்கு சென்றுள்ளது. அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நாம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதை விரைவுப்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும்'' என்றார்.


Next Story