வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை: ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தகவல்


வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை: ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தகவல்
x
தினத்தந்தி 6 March 2023 7:02 PM GMT (Updated: 7 March 2023 6:04 AM GMT)

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கரூர்

தேவையான வசதிகள்

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் நெசவு மற்றும் பின்னலாடை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களின் சார்பு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜவுளி நிறுவனங்களின் தங்கு விடுதியிலோ அல்லது தனிப்பட்ட முறையில் தங்கி தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஜவுளி நிறுவனங்களின் சார்பாகவும் அவர்களின் சார்பு நிறுவனங்களின் சார்பாகவும் சரியான முறையில் செய்து தரப்படுகிறது.

எந்தவித பாதிப்பும் இல்லை

வடமாநிலத்தில் இருந்து வருகை புரிந்திருக்க கூடிய தொழிலாளர்கள் தகுந்த உடல் நலத்துடனும், மனநலத்துடனும், குடும்ப நலத்துடனும் இருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து நிறுவனங்களும் செய்து வருகின்றன. வடமாநில தொழிலாளர்களும், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களும் சகோதர, சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் இருப்பது போன்று இருந்து பழகி சிறந்த முறையில் தொழில் வளர்வதற்கு அவர்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்தியை வெளியிடுவோரின் கருத்துக்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் மிகச்சிறந்த முறையில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அதே முன்னுரிமையும், உரிமையையும் கொடுத்து சிறந்த முறையில் பாதுகாத்து வருகின்றோம். அவர்கள் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதியளிக்கின்றோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story