பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தொலை தூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பதாகும்.

செல்ல வேண்டாம்

அதே போன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவ அமைப்புக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,

இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடனும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையும்,

நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகையால் மீனவர்கள் இன்று முதல் 2-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story