என்.எல்.சி. கொள்கை, கிழக்கிந்திய கம்பெனியின் கொள்கையைவிட கொடூரமானது - அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி. கொள்கை, கிழக்கிந்திய கம்பெனியின் கொள்கையைவிட கொடூரமானது - அன்புமணி ராமதாஸ்
x

தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்.எல்.சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டிவரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கட்டுப்படியாகும் விலையையும் வழங்க மறுக்கிறது. இது பெரும் அநீதி.

நிலம் கொடுத்த மக்களுக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது; தமிழகத்திலிருந்து கிடைக்கும் எல்லா லாபத்தையும் வட இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற என்.எல்.சியின் கொள்கை, கிழக்கு இந்திய கம்பெனியின் கொள்கையை விட கொடூரமானது ஆகும். இதை என்.எல்.சி மாற்றிக்கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்.எல்.சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது; நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது; இப்படிப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை.

ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது. மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாக்க எத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story