என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கிறது


என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கிறது
x

நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

சென்னை,

மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறித்து என்.எல்.சி.க்கு தாரைவார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

முதல் கண்டனக்குரல்

என்.எல்.சி. நிறுவனத்திற்காக அப்பாவி மக்களின் விவசாய பயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான முதல் கண்டனக்குரல் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும்.

ஆனால், அவரோ, இதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறை சொல்லமுடியாத ஆட்சியை வழங்கி வருவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

கடலூர் மாவட்ட உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், திருச்சியில் உழவர்கள் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

முற்றுகை போராட்டம்

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது.

ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும், என்.எல்.சி. நிறுவனம் வெளியேறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பா.ம.க. சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப்போராட்டத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன்.

இந்தப்போராட்டத்தில் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அனைத்து அமைப்புகளும், அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story