நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ
x
தினத்தந்தி 4 March 2023 4:22 PM IST (Updated: 4 March 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு நீடிக்கும். அதிலும், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் பசுமையை இழந்துவிடும். மேலும் ஆங்காங்கே காட்டு தீ ஏற்படும்.

அதன்படி கடந்த 3 மாதங்களாக ஊட்டியில் பெய்த உறைபனியால் வனப்பகுதி வறட்சியை சந்தித்து வருகிறது. அங்கு காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனாலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக நேற்று பார்சன்ஸ்வேலி வனப்பகுதிக்குயில் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து எரிந்து வந்த தீயை நேற்று மாலை வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று முதுமலை காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. மரவகண்டி அணை பகுதியில் கரை ஓரத்தில் இருந்த காய்ந்த மூங்கில்கள் இந்த தீயில் மனமளவென பற்றி எரிந்தது.

சுமார் 50 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மசினகுடி வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் இந்த தீயை வைத்துள்ளதாக வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story