யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்களின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்களின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் தங்கி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேலம்

கன்னங்குறிச்சி:

துப்பாக்கி பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் அவர்கள் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூடியூப்பை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரம் பகுதியை சேர்ந்த கபிலன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

வீட்டில் சோதனை

மேலும் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செட்டிச்சாவடி பகுதியில் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கியிருந்த வீட்டுக்கு மீண்டும் சென்றனர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர், கிராம நிர்வாக அலுவலரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

உபகரணங்கள்

வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான குறிப்புகள், உபகரணங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள், கியாஸ் அடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. வீட்டில் கணக்கெடுக்கப்பட்ட பொருட்களை கோர்ட்டில் விரைவில் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story