மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தினர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் சட்டத்துக்கு புறம்பாக மர்ம கும்பல் ஒன்று செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இந்த மாவட்டத்தில் உள்ள நீடூரை சேர்ந்த சாதிக் பாஷா, ஜஹபர் அலி, கோவையை சேர்ந்த முகமது ஆசிக், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரகமத் ஆகியோரை மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சாதிக்பாஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி

இதனையடுத்து கைதான 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் அனைவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சமீபத்தில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

கைதான 5 பேரிடமும் நடத்திய விசாரணையில் ஐ.எஸ். எனப்படும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மணி நேரம் சோதனை

இந்தநிலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் நேற்று காலை மயிலாடுதுறை சென்றனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை தொடர்ச்சியாக 5 மணி நேரம் நடந்தது. பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர்.



Next Story