மதுரையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை- செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்


மதுரையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை- செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்
x

மதுரையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அவரது வீட்டில் இருந்து செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை


என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

மதுரை கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு சாமியார் சந்து பகுதியை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் ஹமீத் (வயது 35). ஐ.டி. ஊழியர். இவர் ஒரு அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சந்தேகத்துக்கு இடமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுடன் முகமது தாஜூதீன் ஹமீத் தொடர்பில் இருந்திருக்கலாம் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதுதொடர்பாக நேற்று காலை டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. துணை சூப்பிரண்டு அஜய்குமார் சின்கா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிசுபால் மற்றும் ரோஷன் துபே ஆகியோர் அடங்கிய குழுவினர் மதுரை வந்தனர். அவர்கள் நேராக காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் ஹமீத் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

அதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அருகே உள்ள போலீஸ் கிளப்பிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை விடுவித்தனர். இதற்கிடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி ஒரு செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே கடந்த மாதம் முகமது தாஜூதீன் ஹமீத்திடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவரது பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தி அதன் நகலை பெற்று சென்றிருந்ததாகவும், தற்போது நேற்று மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடத்தி செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் சென்றது இல்லை

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு பின்பு முகமது தாஜூதீன் ஹமீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2022-ம் ஆண்டு பீகாரில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் சதித்திட்டம் தீட்டியதாக 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என துணை சூப்பிரண்டு அஜய் குமார் சின்கா தலைமையில் போலீசார் திடீரென்று எனது வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகளிடம் இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றேன். மேலும் நான் இதுவரை பீகாருக்கு சென்றது இல்லை. பிறகு எதற்காக இந்த வழக்கோடு என்னை தொடர்புபடுத்துகிறீர்கள், எனது வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? என கேள்வி எழுப்பினேன். சந்தேகத்தின் அடிப்படையில் என்று கூறி முஸ்லிம் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக, அவர்களது வீட்டில் தொடர்ச்சியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். எனது வீட்டில் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story