கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 6 பேர் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்


கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 6 பேர் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை அழைத்து வந்தனர்

தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் 75 கிலோ வெடிமருந்து மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

என்.ஐ.ஏ.வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதால் இதுதொடர்பான வழக்கு விசாரணை அனைத்தும் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில்தான் நடைபெறும்.

இந்தநிலையில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவர்களை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் கோவை சிறையில் இருந்து சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்

பின்னர் நேற்று காலை 10.15 மணிக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையொட்டி என்.ஐ.ஏ. கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பெயர், விலாசம் உள்ளிட்டவற்றை பதிவு செய்த போலீசார் அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்த பிறகே கோர்ட்டுக்குள் அனுமதித்தனர்.

அதேபோன்று, அவர்கள் வந்த வாகனங்களையும் போலீசார் சோதனைக்கு பின்பே அனுமதித்தனர். கோர்ட்டு வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கோர்ட்டு வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வளாகம் பரபரப்பாக இருந்தது.

22-ந்தேதி வரை காவல்

சுமார் 2 மணி நேரம் முகமது அசாருதீன் உள்பட 6 பேரும் கோர்ட்டு வளாகத்திலேயே வேனில் அமர வைக்கப்பட்டனர். மதியம் 12.15 மணிக்கு அவர்கள் கோர்ட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டு நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இதன்பின்பு கைதான 6 பேரையும் வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதியம் 12.45 மணிக்கு போலீஸ் வேன் மூலம் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story