எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
தஞ்சைக்கு வருகிற 4-ந்தேதி வருகைத்தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயல்வீரர்கள் கூட்டம்
தஞ்சை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய பிரிவு துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவ பிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகர் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட பார்வையாளரும், அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில், ஜெயலலிதா கூறியது போல இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். தற்போது 52-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறார்கள்"என்றார்.
எடப்பாடி பழனிசாமி வருகை
கூட்டத்தில், மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது. பூத்கமிட்டி, மகளிரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் அ.தி.மு.க. பிற அணிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வெற்றிக்கு பாடுபடுவது.
மேட்டூர் அணையில் இருந்து அவசரகதியில் தண்ணீர் திறந்துவிட்டு குறுவை, சம்பாபயிர்களை பாதிப்படைய செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர செயலாளர் சரவணன் செய்திருந்தார். முடிவில் ஸ்டாலின் செல்வராஜ் நன்றி கூறினார்