தமிழ் மொழி தெரியாமல், தமிழகத்தில் வடமாநிலத்தவர் வேலை பார்க்கிறார்கள்
மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் நடக்கும் மோசடியால் தமிழ் மொழி தெரியாமல் தமிழகத்தில் வடமாநிலத்தவர் வேலை பார்க்கும் நிலை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
கும்பகோணம்:
அமைச்சர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணம் வந்தார். அப்போது கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கும்பகோணத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலய கட்டிட பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கும்பகோணத்தில் கட்டப்படும் கலைஞர் அறிவாலயத்திற்கான பணிகள் முடிந்த பிறகு அதில் கலைஞர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவாலயத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
போட்டித்தேர்வுகளில் மோசடி
தேசிய அளவில் நடக்கக்கூடிய மத்திய அரசு பணிக்கான தேர்வுகளில் நடக்கக்கூடிய மோசடிகள் இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து நடந்து வருகிறது. வட மாநிலங்களில் பல நேரங்களில் போட்டித்தேர்வு என்று வரக்கூடிய சமயத்தில் இது தொடர்ச்சியாக நடக்கிறது.அதனால்தான் தமிழகத்தில், தமிழ் மொழி தெரியாமல் வடமாநிலத்தவர் வேலை பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது மத்திய அரசிற்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் அதுபோன்ற மோசடி நடக்க வாய்ப்பில்லை.பள்ளி தேர்வு, கல்லூரி தேர்வு அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையாக நடத்தப்படுகிறது. இதனை நினைத்தால் பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.